Skip to main content

படமாக்க நினைத்தது ஒன்று... ஆனால் நடந்தது வேறு..! - ஆஸ்கர் விருது பெற்ற `இகரஸ்’ ஆவணப்படம் எப்படி?

iamge

`இகரஸ்’ என்பது கிரேக்கக் கடவுள் ஒன்றின் பெயர். இகரஸின் தந்தை டேடலஸ், அவருக்கு மெழுகால் செய்யப்பட்ட இறக்கைகளை அளித்து, கடலுக்கு மிக அருகிலும், சூரியனுக்கு மிக அருகிலும் பறக்கக் கூடாது என நிபந்தனை அளிக்கிறார். குறுகிய நிலப்பகுதியில் பறப்பதை விரும்பாத `இகரஸ்’ உயர உயர பறக்கிறார். சூரிய வெப்பத்தால் இறகுகளில் இருக்கும் மெழுகு உருக, கடலில் விழுந்து சாகிறார் `இகரஸ்’. இந்த கிரேக்க புராணக் கதை தன் லட்சியத்தை மீறிச் செயல்படுபவனின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை விளக்குவதாக இருக்கிறது.

'இகரஸ்’ இந்த ஆண்டிற்கான `சிறந்த ஆவணப்படம்’ பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது. 2017 ம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியான இந்த ஆவணப்படம் விளையாட்டுத்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியது.

'இகரஸ்’ ஆவணப்படத்தின் இயக்குநர் ப்ரைன் ஃபொகெல். அவருக்கு உலகின் மிகப்பெரிய சைக்கிள் ரேஸில் வெற்றிபெற வேண்டும் என்பது கனவு. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் ரேஸில், ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தால் கூட, யாரிடமும் சிக்காமல் வென்றுவிடலாம் என்பதை ப்ரைன் அறிகிறார். இதை அம்பலப்படுத்தும் முயற்சியில்தான் ஈடுபடப்போவதாக ஆவணப்படத்தின் தொடக்கத்தில் ப்ரைன் கூறுகிறார். 

இந்த முயற்சிக்காக அவர் தன்னையே பரிசோதனை செய்யவுள்ளதாகவும் கூறுகிறார். ஊக்க மருந்து பயன்படுத்தியும், எந்த விதமான சோதனைகளிலும் சிக்காமல் தப்பிக்க உதவுவதற்காக அவருக்கு ஒரு ரஷ்ய விஞ்ஞானி கிரகோரி ராட்சென்காவ்வின் தொடர்பு கிடைக்கிறது. ரஷ்ய நாட்டின் விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்துக்கு எதிரான அரசு நிறுவனத்திற்கு அன்றைய தலைவராக இருக்கிறார் ராட்சென்காவ்.

முதலில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் ரேஸில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரத் தொடங்கி, எதிர்பாராமல் நடந்த சம்பவங்கள் உலகின் மிகப்பெரிய வல்லரசான ரஷ்யாவுக்கு 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தடை பெற்றது, தடையைத் தாண்டி மீண்டும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நுழைந்தது என த்ரில்லர் திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது `இகரஸ்’.iamge

Tamil