Skip to main content

பா.ஜ., தலைவரும், பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவருமான, அமித் ஷா

பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவருமான, அமித் ஷா

 

பா.ஜ., தலைவரும், பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவருமான, அமித் ஷா, முதன்முறையாக, ராஜ்யசபா, எம்.பி.,யாகி உள்ளார். தினமும் சபைக்கு வந்து விடுகிறார். கட்சி, எம்.பி.,க்கள் ஒழுங்காக சபைக்கு வருகின்றனரா என, தினமும் கவனிக்கிறார். ஆனால், பெரும்பாலான, பா.ஜ., - எம்.பி.,க்கள் முக்கிய விவாதங்கள் நடக்கும் போது, சபையில் இருப்பதில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அமித் ஷா, எம்.பி.,க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதன்முறையாக, எம்.பி., பதவிக்கு வந்தவர்கள், சபையில் முதன்முறையாக பேசும் போது, அனைவரும் வரவேற்று கை தட்டுவர். புதிய, எம்.பி.,க்கள், கன்னிப் பேச்சிற்காக, நிறைய விஷயங்களை படித்து, தயார் செய்து பேசுவர். இப்படித் தான் அமித் ஷா, தன் முதல் பேச்சிற்காக நிறைய படித்து, தயார் நிலையில் வந்திருந்தார்.சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக, இவர் பேசுவதாக இருந்தது. இந்த வரியால், குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு அதிக, 'சீட்'டுகள் கிடைக்கவில்லை என, சொல்லப்பட்டது. எனவே, 'இந்த வரியால் பாதிப்பு கிடையாது' என பேச, அமித் ஷா முடிவு செய்திருந்தார். தினமும் சபைக்கு வரும் ஷா, இந்த வரி தொடர்பான மசோதா, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் போது பேசி விட வேண்டும் என, காத்திருந்தார்.ஆனால், ராஜ்யசபாவில், காங்., உட்பட எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக இருப்பதால், தினமும் ஏதாவது ஒரு விவகாரத்தில், கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியபடி இருந்தனர். 'முத்தலாக்' விவகாரத்தில், பெரும் அமளி ஏற்பட்டது. இதனால், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான மசோதா, அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. கடைசி வரை, அமித் ஷா தன் கன்னி பேச்சை பேசவே முடியாமல் போனது. மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அமித் ஷா, பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

உள்ளே... வெளியே!

ஆளுங்கட்சியான, பா.ஜ.,வும், எதிர்க்கட்சியான காங்கிரசும், பொது மேடைகளிலும், பார்லிமென்டிலும், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசுகின்றன. சமீபத்தில், 'முத்தலாக்' விவகாரத்தில், ராஜ்யசபாவில், காங்., - எம்.பி., ஆனந்த் சர்மா கொண்டு வந்த சட்ட சீர்திருத்தங்களை, பா.ஜ., ஏற்கவில்லை.மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத் உட்பட பலர், ஆனந்த் சர்மாவை பேச விடாமல் கூச்சலிட்டனர். நிதியமைச்சர், அருண் ஜெட்லி, ஆனந்த் சர்மாவை கடுமையாக விமர்சித்து பேசினார்.ஆனால், பார்லி., கூட்டத்தொடரின் கடைசி நாளில், ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பார்லிமென்டில் உள்ள தன் அறைக்கு, பா.ஜ., தலைவர், அமித் ஷா, அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத் ஆகியோருடன், வேறு சில அமைச்சர்கள், எம்.பி.,க்களையும் அழைத்திருந்தார்.அங்குள்ள மேஜையில் பெரிய, 'கேக்' வைக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில், ஆனந்த் சர்மா உள்ளே வந்தார். அவருடன் சில, காங்., - எம்.பி.,க்களும் வந்தனர். உள்ளே வந்தவரை ஜெட்லி வரவேற்க, அனைவரும், 'பிறந்த நாள் வாழ்த்துகள்' என கோஷமிட, சர்மா முகத்தில் ஆனந்த அதிர்ச்சி. 'கேக் வெட்டுங்கள்' என, அருண் ஜெட்லி அழைக்க, ஆனந்த் சர்மா கேக் வெட்டினார். கேக்குடன், மதிய சாப்பாட்டையும் ஏற்பாடு செய்திருந்தார், நிதியமைச்சர்.அனைவரும், ஆனந்த் சர்மாவை வாழ்த்தி, சாப்பிட்டு சென்றனர். 'பார்லிமென்டிற்குள் எலியும், பூனையுமாக சண்டை போட்டுக் கொள்ளும் இந்த இரு கட்சியினரும், இப்படி வெளியே கைகோர்த்து, நட்போடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதே' எனக் கேட்டால், 'காங்., எதிர்க்கட்சி தான்; எதிரி கட்சியல்ல' என்கின்றனர், பா.ஜ.,வினர்.நம்ம ஊரில் இப்படி நடக்குமா?

தமிழருக்கு தலைமை பதவி?

இ.கம்யூ., பொதுச் செயலராக பதவி வகிப்பவர், சுதாகர் ரெட்டி. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது எனக் கூறி விட்டார். இதனால், புதிய பொதுச் செயலரை, கட்சி தேர்ந்தெடுக்க உள்ளது.ஏப்., மாதம், கேரளாவின் கொல்லத்தில், கட்சியின் முக்கிய கூட்டம் நடக்க உள்ளது. அப்போது, சுதாகர் ரெட்டிக்கு பதிலாக, புதிய நபர் நியமிக்கப்படுவார். பொதுச் செயலர் பதவி தான், இக்கட்சிக்கு தலைமை பதவி.வழக்கமாக, கம்யூ., கட்சிகளில் தலைமை பதவியில் இருப்பவர்கள், 70 வயதை கடந்தவர்களாக இருப்பதுடன், நடக்கவும் கஷ்டப்படுவர். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், பா.ஜ.,வை எதிர்கொள்ள, வயதானோர் சரிப்பட்டு வர மாட்டார்கள் என்பதால், கம்யூ., கட்சிகள் தங்கள் நிலையை மாற்றி, நடுத்தர வயதினரை நியமிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.தமிழகத்தைச் சேர்ந்த, டி.ராஜா, இ.கம்யூ., பொதுச் செயலராக நியமிக்கப்படுவார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூத்த தலைவர்களான மறைந்த, இந்திரஜித் குப்தா, பரதன் ஆகியோரால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டவர், ராஜா. மேலும், தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தலைமை பதவியை ஏற்பது நல்லது என, கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.

 

கெஜ்ரிவாலும் இப்படி தானா?

'ஊழலுக்கு எதிரான இயக்கம் மூலம் பிரபலமான, அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி, முற்றிலும் மாறுபட்டது; மக்களுக்காகவே இந்த கட்சி' என, துவக்கத்தில் அந்த கட்சியினர் கூறினர். ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. டில்லி சட்டசபையில் இருந்து, ராஜ்யசபாவிற்கு மூன்று, எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆம் ஆத்மிக்கு, டில்லி சட்டசபையில் அதிக பலம் இருப்பதால், இந்த மூன்று, 'சீட்'டுகளுமே, அந்த கட்சிக்கு தான் கிடைக்கும்.இந்த பதவியை பெற, கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் போட்டி போட்டனர். ஆனால், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, சஞ்சய் சிங் என்பவருக்கு ஒரு சீட்டை ஒதுக்கி, மற்ற இரு சீட்டுகளையும், கட்சியில் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு கொடுத்து விட்டார், கெஜ்ரிவால்.சுசில் குப்தா என்பவர், பெரிய பணக்காரர்; காங்., சார்பில், தேர்தலில் போட்டியிட்டவர். கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான, ஹரியானாவைச் சேர்ந்தவர். 'ஒரு பெரிய தொகையை கொடுத்து, சீட் வாங்கி விட்டார்' என, இவர் மீது குற்றச்சாட்டு. இப்படி சொன்னவர்கள் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார், குப்தா.மற்றொருவர், நாராயண் தாஸ் குப்தா. இவர், கணக்கு தணிக்கையாளர். மத்திய அமைச்சர், ஜெட்லிக்கு மிகவும் நெருக்கமானவர். இந்த இருவரும் எப்படி சீட் வாங்கினர் என்பது, கட்சியில் உள்ள பலருக்கும், இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. 'கெஜ்ரிவால், தன் இனத்தைச் சார்ந்த இருவருக்கு சீட் கொடுத்து விட்டார். அடுத்த தேர்தல் செலவுகளை, அந்த பணக்கார குப்தா கவனித்துக் கொள்வார் போலிருக்கிறது' என்ற வதந்தி, கட்சி வட்டாரங்களில் உலவுகிறது.

Tamil