Skip to main content

மண் புழு உரம்

image

செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண் வளத்தை அதிகரிக்கும் மாமருந்து இது. மண் புழுக்கள் இதற்கு கைகொடுக்கின்றன. மண் புழு உரம் தயாரிக்க கற்றுக்கொண்டால் கைநிறைய காசு பார்க்கலாம். இது மாயாஜாலம் அல்ல; ரொம்ப சிம்பிள். மண் புழு உரம் தயாரிப்பில் ஈடுபடும் ஈரோடு கோட்டை சக்தி அபிராமி மகளிர் சுய உதவிக்குழுவினர் கூறியதாவது.

காய்கறிக்கழிவு, மாட்டுச்சாணம், செம்மண், மண்புழு கலவையில் 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும், ஒரு மாதத்திற்குப் பின்னர் வாரம் ஒரு முறை மேலாகப் படியும் உரத்தை அள்ளி சேகரிக்க வேண்டும்.

 உழைப்பும் பெரிய அளவில் இல்லை. 3 மாதத்தில் மண் புழு உரம் மற்றும் மண்புழுக்கள் உற்பத்தியாகி விற்பனைக்கு தயாராகியது. அவற்றை பாக்கெட் போட்டு கடைக்கு விற்கிறோம். விவசாயிகள் மொத்தமாகவும் வாங்கிச் செல்கிறார்கள்.

 ஷெட், காய்கறிக்கழிவுகள் ஆகியவை இலவசமாகக் கிடைத்ததால், சாணம், செம்மண், மண்புழுக்கள் மற்றும் பராமரிப்புச்செலவு மட்டும் தான். அதற்கு ரூ.10 ஆயிரம் செலவானது.
 உரம் மற்றும் மண்புழுக்கள் விற்றதில் ரூ. 24 ஆயிரம் கிடைத்தது. 3 மாதத்தில் ரூ.14 ஆயிரம் லாபம். இதே போல் கூடுதலாக ஷெட் அமைத்து உற்பத்தி செய்தால் பல மடங்கு லாபம் பெருகும் வாய்ப்புள்ளது.image

மண் புழு உரம் தயாரிப்பது எப்படி?

மண் புழு உரம் அமைக்கும் தொட்டியில் அரை டன் செம்மண், அதற்கு மேல் ஒரு டன் காய்கறிக்கழிவு அல்லது மக்கிய மண்ணை பரப்ப வேண்டும். 20 நாள் கழித்து, அதன் மேல் ஒரு டன் மாட்டுச்சாணம் கொட்ட வேண்டும்.

 அடுத்த 10 நாளில் மாட்டுச்சாணத்தின் மேல் 5 ஆயிரம் மண் புழுக்களை விட வேண்டும். மேல் பகுதியில் தேங்காய் நார் பரப்பி, 2 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.

 ஒரு மாதத்தில் மேலிருந்து மண் புழுக்கள் உள்ளே ஊடுருவும். மேலேயுள்ள மண்ணைச் சாப்பிட்டு, வெளியாகும் கழிவுகள் உரங்களாக மேல் பகுதியில் படியும். ஒரு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை மேற்புற மண், அதாவது மண்புழு உரத்தை அள்ள வேண்டும்.

படிப்படியாக மேற்புறம் அனைத்தும் மண்புழு கழிவுகளாக, உரமாக வந்து கொண்டிருக்கும். 3 மாத நிறைவில் கீழுள்ள செம்மண் பரப்புக்கு மண்புழுக்கள் சென்று விடும்.

 இதன் மூலம் 2 டன் பரப்புள்ள மண், சாணப்பரப்பில், கல், செத்தை கழிவுகள் போக ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கும். இதற்கிடையில், மண் புழுக்கள் அனைத்தும் முட்டையிட்டு, சம எண்ணிக்கையில் புதிய மண்புழுக்கள் உருவாகியிருக்கும்.

Tamil