விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ரூ. 6 ஆயிரம் முதல்கட்டமாக வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார். உதவித் தொகை 3 தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் இடைக்கால பட்ஜெட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
2 ஹெக்டேர் நிலத்துக்கு குறைவாக வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை, 3 தவணைகளாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அப்போது, விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை நிதி அமைச்சர் கோயல் அறிவித்தார், அவர் கூறுகையில், "வேளாண் துறையில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள்.
அவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, 2 ஹெக்டேர் நிலப்பரப்புக்குக் குறைவாக வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை ஆண்டுக்கு 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும். இந்த நிதிஉதவி அனைத்தும் மத்திய அரசால் மட்டும் வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை அனைத்தும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்துக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதி 2019-20-ம் ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு உணவுதானியங்களை விலை குறைவாக வழங்குவதற்காக 2018-19-ம் ஆண்டில் ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு பியுஷ் கோயல் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 17 மட்டும் வழங்குவதா?- ராகுல்
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 17 மட்டும் வழங்குவதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது-
விவசாயிகளுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் அளிக்கிறோம் என்றால் அது அவர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதைக்காக இந்த தொகையை வழங்குகிறோம். இது முதல்கட்ட நடவடிக்கைதான். நிரந்தர தீர்வு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.
2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியுஷ் கோயல் மக்களவையில் இன்று தாக்கல்செய்தார். இதில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 வீடுகளுக்கு வீட்டுக்கடன் சலுகை என வருமான வரி தொடர்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
Interim Budget 2019: An ‘insult’ to farmers, says Rahul