Skip to main content

ஏன் #TheShapeOfWater மிஸ் பண்ணக் கூடாத சினிமா?!

image

ண்ணீருக்கு உருவம் உண்டா? இல்லை. ஆனால், அது எதில் இருக்கிறதோ அந்த உருவத்தை எடுத்துக்கொள்ளும் வல்லமை கொண்டது. குடுவை, சிறு குழி, குளம், கடல் - அளவுகளைப் பற்றி ஆராயாமல் பேரன்போடு எல்லாவற்றிலும் தன்னை நிறைத்துக்கொள்ளும். காதலும் அப்படித்தான். அன்பு யாரிடமிருந்து வெளிப்படுகிறதோ, அவர்கள் உருவத்தைப் பார்க்காமல், அவர்களின் உணர்வுகளை மட்டும் இனங்கண்டு, தன்னை வெளிப்படுத்தும். பிரதிபலிக்கும். 

கடவுளின் குழந்தையான எலிசாவிற்கு (Sally Hawkins) குரல் இல்லை. பேச்சு வராது. அவளுக்கு அது தேவையும் இல்லை. காரணம், அவள் சைகை மொழியிலேயே கவிதை எழுதும் திறன்படைத்தவள். அவளின் கழுத்தில் இருக்கும் மூன்று கீறல் வடுக்கள், அவளின் குழந்தைப் பருவச் சோகங்களை நமக்கு நொடியில் விளக்கி விடும். அவள் வீடு ஒரு பழைய திரையரங்கின் மேலே இருக்கிறது. அதே கட்டடத்தின் அருகில் இருக்கும் கைல்ஸ் (Richard Jenkins) என்ற கிழவர் ஓர் ஓவியர். அவளுக்குத் தந்தை போன்றவர். நல்ல நண்பர். எலிசாவுடன் வேலை பார்க்கும் செல்டா (Octavia Spencer) என்ற கறுப்பினப் பெண்மணிதான் அவளின் குரல். எலிசாவிற்கும் செல்டாவிற்கும் தொலைவில் பால்டிமோர் பகுதியில் இருக்கும் ஒரு ரகசிய அரசாங்க ஆய்வுக்கூடத்தில்தான் சுத்தம் செய்யும் ஜேனிட்டர் வேலை. அதுவும் இரவுப் பணி.

அது 1962 ம் ஆண்டு. பனிப்போர் (Cold War) நடந்துகொண்டிருக்கும் காலகட்டம். அதாவது அமெரிக்காவும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட தருணம். பால்டிமோரில் இருக்கும் இந்த ஆய்வுக்கூடம் போல முக்கியமான இடங்களிலிருந்து ஒரு சிறிய தகவல் ரஷ்யாவிற்குக் கசிந்தாலும் அது பேராபத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அடுக்கடுக்கான பாதுகாப்புகள் கொண்ட அந்தக் கூடத்தில், மலரவே கூடாத இடத்தில், மலரவே கூடாத விதத்தில் மலர்கிறது எலிசாவின் காதல். அது தானே காதல்!.

தென்னமெரிக்காவின் கடல் பகுதியிலிருந்து ஒரு வினோத உயிரினத்தைப் பிடித்துக்கொண்டு அந்த ஆய்வுக்கூடத்திற்கு வருகிறார் கர்னல் ரிச்சர்ட் ஸ்ட்ரிக்லேண்ட் (Micheal Shannon). அது அமேசான் பழங்குடியினர் கடவுளாக வழிபட்ட உயிரினம். மனிதர்களைபோலவே இரண்டு கை, இரண்டு கால் மற்றும் கண்கள் கொண்டிருந்தாலும் பார்க்க பயமூட்டும் விதத்தில் இருக்கும். நீரில் மட்டுமே வாழும் பிராணி. அதை அந்த ஆய்வுக் கூடத்தில் அடைத்து வைத்து, ஆராய்ச்சிகள் செய்கின்றனர். 

அது எப்படிப்பட்ட தருணம் என்றால், ரஷ்யா, லைக்கா என்ற நாயை விண்வெளிக்கு அனுப்பிவிட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய இடத்தை அதன் மூலம் அது ஏற்கெனவே பிடித்து விட்டது. எனவே, அமெரிக்கா ஏதேனும் ஒன்றைச் செய்தாக வேண்டிய கட்டம் அது. இந்த மிருகம் அதற்கு உதவும் என்பது அவர்களின் நினைப்பு. அப்படிப்பட்ட மிருகத்துக்குப் பாசம் காட்டுகிறாள் எலிசா. மிகவும் புத்திசாலியான அந்த மிருகம் இவளின் சைகை மொழியை விரைவாகக் கற்றுக்கொள்கிறது. எலிசா அதன் மேல் காதல் கொள்கிறாள். உலகம் பார்த்திடாத வினோதமான காதல்களில் இடம் பிடிக்கும் முயற்சியுடன் வளரும் அந்தக் காதலுக்கு ஓர் ஆபத்து வருகிறது. அந்த உயிரினத்தின் மேல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் எதுவும் புலப்படாததால், அதை அறுத்து அதன் உடற்கூறுகளை ஆராயலாம் என்ற முடிவுக்கு அனைவரையும் கொண்டு வருகிறான் கர்னல் ரிச்சர்ட் ஸ்ட்ரிக்லேண்ட். எலிசா தன் காதலை காப்பாற்றிக் கொள்ள ஆய்வுக் கூடத்திலிருந்து அதைக் கடத்தி விடுகிறாள். அரசாங்கம் ஒரு புறம் துரத்த, நண்பர்கள் ஒரு புறம் உதவிக் கரம் நீட்ட, இருவரும் கரை சேர்ந்தார்களா என்பதை நெகிழ்ச்சி கலந்து பரபரப்பாகக் கூறியிருக்கிறார் இயக்குநர் கியார்மோ டெல் டோரோ (Guillermo del Toro).image

Tamil