Skip to main content

விதிகளை பின்பற்றி பேனர் வைக்க அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம்!

chennai high court

சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்று பேனர்கள் வைக்க அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசுகின்றனர். பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையின்போது, சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை வரவேற்பு பேனர்கள் வைக்க அனுமதிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 14 இடங்களில் அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

chennai banner

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேனர் வைக்க அனுமதி அளிக்கக்கூடாது என எதிர்மனுதாரர்களான திமுக மற்றும் டிராபிக் ராமசாமி சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பேனர் வைக்க அனுமதிக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்று பேனர்கள் வைக்க அனுமதி வழங்கினர். விதிகளை பின்பற்றி, மக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்களை வைக்கலாம் என கூறினர்.

சென்னை பல்லாவரம் அருகே சுபஸ்ரீ என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்ட பேனர் அவர் மீது விழுந்தது. 

இதில் நிலைகுலைந்து விழுந்த சுபஸ்ரீ, பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். பேனர் சரிந்து விழுந்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். எனவே பேனர் விவகாரம்  விஸ்வரூபம் எடுத்துள்ளது.

banner issue

 

Tamil