Skip to main content

சர்வதேச அகிம்சை தினம்: அமெரிக்க பாராளுமன்றத்தில் சிறப்பு தீர்மானம்!

gandhi

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ந் தேதி சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் அகிம்சை தினம் அனுசரிக்கப்பட்டது.
 
இதையொட்டி காந்தியடிகளின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் செனட் சபையில் உறுப்பினர்கள் டெட் குரூஸ், ராபர்ட் மெனன்டெஸ் ஆகியோர் இந்த தீர்மானத்தை அறிமுகம் செய்தனர்.

gandhi

அதில், "இங்கிலாந்திடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்காக ஆண்டுக்கணக்கில் காந்தியடிகள் நடத்திய விடுதலை போராட்டத்தை இந்த தீர்மானம் அங்கீகரிக்கிறது. அரசியல் மாற்றத்துக்காக அவர் மேற்கொண்ட முன்னோடி அகிம்சை போராட்டங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களின் விடுதலைக்கு உதவியதுடன், உலகம் முழுவதிலும் மார்ட்டின் லூதர் கிங் போன்ற ஏராளமானோருக்கு உத்வேகமாகவும் அமைந்திருக்கிறது" என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும், "சர்வதேச அகிம்சை தினத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இந்த தீர்மானம் ஆதரவு அளிப்பதுடன், அனைத்து அமெரிக்கர்களும் இதை கடைப்பிடிக்கவும் தீர்மானம் அழைப்பு விடுக்கிறது" என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Tamil